இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2048ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே தமது போராட்டமாகும் என்றும் தெரிவித்தார்.
“தேசிய நிலைமாற்றத்திற்கான திட்டவரைபடத்தை” நாட்டுக்கு முன்வைத்து விசேட உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக கடந்த 09 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி இதன் போது விரிவாக விளக்கினார்.
அத்துடன், எதிர்பார்க்கும் இலக்குகளை அடைவதற்கான செயல்பாட்டு முன்மொழிவுகளையும் ஜனாதிபதி நாட்டுக்கு முன்வைத்தார்.
அரச நிதி மறுசீரமைப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு, சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு, அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு ஆகிய பிரதான 04 தூண்களில் நாட்டின் எதிர்காலம் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக நிலைமாற்றும் செயற்பாட்டுக்கு அவசியமான தொழிநுட்ப மற்றும் நிலையான முயற்சிகளை அமுல்படுத்த தனியார் துறையிடமிருந்து முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளும் கூட்டாய்வு முறையொன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நவீன உலகுக்கும், நவீன தொழில்நுட்பத்துக்கும் ஏற்றவாறு நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்காவிட்டால் நாடு பின்நோக்கிச் செல்லும் என்றும், அதன் முடிவாக நாடு, பொருளாதார காலனித்துவமாக மாறிவிடும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எனவே நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததோடு, அதற்கு அவசியமான துரித பொருளாதார மறுசீரமைப்புக்களை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஒழுங்குபடுத்தல், கொள்முதல் மற்றும் அரசியல் ஆகிய அனைத்து அம்சங்களிலும் ஊழலை முற்றிலுமாக நிறுத்துவதற்கும், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட அரசாங்க பொறிமுறையின் மூலம் ஊழலுக்கு எதிரான நடைமுறைகளை செயல்படுத்துவதற்கும் ஒரு விசேட செயலணி நிறுவப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அடுத்த 05 ஆண்டுகளில் நாம் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்துவதோடு, அடுத்த 25 ஆண்டுகளில் இலங்கையை உயர் வருமானம் ஈட்டும் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, முதல் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டைக் கட்டியெழுப்பும் பணி அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும், அதற்காக இளைஞர்களை தயார்படுத்துவதாகவும் தெரிவித்தார். அந்தப் பணியை மேற்கொள்ளும் திறன் எமது இளைஞர்களிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.
இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டம், இலகுவான பணி இல்லையென்றாலும் நாட்டிற்கு சிறந்த விடயங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாம் எடுக்கும் தீர்மானங்கள் எவ்வளவு கடினமான மற்றும் வேதனையானதாக இருந்தாலும், எதிர்கால சந்ததியினருக்காக அந்தக் கடினமான பாதையில் சரியான கொள்கைகளின்படி முன்னேறுவதன் மூலம் மாத்திரமே நாட்டை மீண்டும் உயர்வடையச் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஒரு இலக்குடன் சரியான பாதையில் செல்வதன் விளைவுகளை இன்று நாம் அனைவரும் அனுபவிப்பதாகவும், 70% வரை உயர்ந்திருந்த பணவீக்கத்தை தற்போது 25.2% வரை குறைக்க முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனால் வாழ்க்கைச் சுமை படிப்படியாகக் குறைந்து வருவதோடு, ஒட்டுமொத்த சமூகமும் இந்த பயனை உணர ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடினமான பயணத்தின் போது அனைத்து துன்பங்களையும் சகித்துக் கொண்ட நாட்டு மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி, இந்தப் பாதையில் தொடர்ந்து செல்வதன் மூலம் சிரமங்களையும் துன்பங்களையும் குறைத்து நாட்டுக்கு சிறந்த பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய முழுமையான உரை
‘’நமது நாட்டின் பொருளாதாரத்தை கையாளும் பொறுப்பை நான் ஏற்றது முதல், பொருளாதாரம் குறித்த உண்மையான தகவல்களை அவ்வப்போது உங்களுக்கு வெளிப்படுத்தி வருகிறேன். பொருளாதாரத்தின் உண்மையான தோற்றத்தை எப்போதும் வெளிப்படைத்தன்மையுடன் உங்கள் முன் வைக்க விரும்பினேன். நாட்டின் உண்மை நிலை, அந்த சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கான வழி மற்றும் நாட்டுக்காக நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய பங்கு தொடர்பாக நான் உங்களை தெளிவுபடுத்தினேன்.
நெருக்கடியான பொருளாதாரத்தால் பல இன்னல்களை சந்தித்து வந்த நாம் தற்போது மெதுமெதுவாக சாதகமான நிலையை அடைந்து வருகிறோம். நலிவடைந்து, வீழ்ச்சியடைந்த நமது பொருளாதாரம், ஓரளவுக்கு ஸ்திரமாகி வருகிறது.
கடந்த காலத்தில் நாம் கையாண்ட சரியான நடைமுறைகளினால் இந்த நிலையை எங்களால் அடைய முடிந்தது.அதே போன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டோம். அந்தச் சவால்களை எதிர்கொள்ளும்போது பல்வேறு சிரமங்களை சந்தித்தோம்.
தாய் நாட்டிற்காக இந்தக் கஷ்டங்களைத் தாங்கிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழியில் இன்னும் சில காலம் தொடர்ந்து செல்வதன் மூலம் கஷ்டங்களையும் துன்பங்களையும் குறைத்து, சிறந்தவொரு பொருளாதாரத்தை எமக்கு ஏற்படுத்த முடியும். இலங்கை இப்போது முன்னேற்றகரமான மற்றும் வளமான பயணத்தை மேற்கொள்ள தயாராகியுள்ளது.
அந்தப் பயணத்தை நாம் எவ்வாறு தொடர வேண்டும்? அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன? என்பது முக்கியமானது.
எதிர்காலத்தில் நாங்கள் பின்பற்றும் நடவடிக்கைகள் குறித்து இன்று நான் உங்களுக்கு விளக்கப் போகிறேன். எங்கள் எதிர்கால திட்டவரைபடம் இது.
எமது முன்னோக்கிய பயணத்தில் வெற்றியடைவதற்கு இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் முழுமையான மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நான் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளேன். இந்த பொருளாதார சீர்திருத்தங்கள், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலை 2023 பட்ஜெட்டில் நான் குறிப்பிட்டேன். சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப இந்த நடவடிக்கையை நாம் இப்போதே எடுக்க வேண்டும்.
இங்கு நாம் எடுக்கும் முடிவுகள் கடினமாகவும் வேதனையாகவும் இருக்கும். பிரபலமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சரியான கொள்கைகளின்படி இந்த கடினமான பாதையில் நாம் தொடர்ந்தால் மட்டுமே நம் நாட்டை மீண்டும் உயர்த்த முடியும். இந்தப் பாதையில் நாம் தொடர்ந்தால்தான் எதிர்கால சந்ததியினர் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய நாட்டை உருவாக்க முடியும்.
பாரம்பரிய அரசியலில் ஈடுபடும் சில குழுக்கள் பொருளாதார மறுமலர்ச்சியைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பொருளாதார மறுசீரமைப்புக் குறித்து மக்களிடம் தவறான அச்சத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. எப்போதும் கூறும் “நாட்டை விற்கப் போகின்றார்கள்” என்ற கோஷத்துடன் தொடர்ந்தும் மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் முன்வைக்கும் கோஷம் இதுதான். ஐம்பதுகளிலும் கூட நாடு விற்கப்படுகிறது என்று சொல்லி மக்களை ஏமாற்றினார்கள். அறுபதுகளிலும் நாட்டை விற்பதாகச் சொல்லி மக்களைத் தவறாக வழிநடத்தினார்கள். எழுபதுகளிலும் நாடு விற்கப்படுகிறது என்று மக்கள் மத்தியில் ஒரு அசாத்திய பயத்தை உருவாக்கினார்கள். எண்பதுகளில் கூட நாடு விற்கப்படுகிறது என்று சொல்லி மக்களை அச்சத்தில் ஆழ்த்தினர். அன்று முதல் இன்று வரை இந்தக் குழுக்கள், நாட்டை விற்கப் போகின்றார்கள் என்ற கோசத்தை முன்வைத்து பொருளாதார சீர்திருத்தங்களை சீர்குலைக்க முயன்று வருகின்றன.
இனி, இது போன்ற கோஷங்களுக்கு நீங்கள் ஏமாற மாட்டீர்கள் என்று எங்களுக்கு தெரியும். நாட்டை முன்னேற்ற நாம் அனைவரும் கடுமையாக உழைத்து, நம்மை அர்ப்பணிக்க வேண்டியுள்ளது. 2048 ஆம் ஆண்டுக்குள் உலகில் வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற நமது இலக்கை அடைய வேண்டும். நவீன உலகத்துக்கும், நவீன தொழில்நுட்பத்துக்கும் ஏற்றவாறு நமது பொருளாதாரத்தை வடிவமைக்காவிட்டால், பின்னோக்கிச் செல்ல வேண்டி ஏற்படும். இத்தகைய விலகலின் விளைவு, நாடு பொருளாதார காலனித்துவமாக மாறுவதுதான்.
நாம் முன்னோக்கிச் செல்வோம். போட்டி நிறைந்த உலகை எதிர்கொள்ளும் வகையில் நமது பொருளாதாரத்தை உருவாக்குவோம். நாட்டுக்குத் தேவையான பொருளாதார மறுசீரமைப்புகளை முறையாக நிறைவேற்றுவோம்.
தவறான கொள்கைகள், பலவீனமான நிகழ்ச்சிகள், தோல்வியடைந்த வேலைத்திட்டங்கள் ஆகியவற்றை ஒரு ஒழுங்கான பாதையில் முன்னெடுப்பதையே பொருளாதார மறுசீரமைப்புகள் மூலம் நாம் மேற்கொள்கிறோம்.
பழைய பாரம்பரிய முறைகள் மூலம் வங்குரோத்து நிலையை அடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.
நாம் ஒன்றாக நமது எதிர்காலத்தை உருவாக்குவோம். சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்குவோம். இப்பணியில் இணையும் உங்கள் அனைவருக்கும் நன்றி.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.