தோட்டம் என்றால் அங்குள்ள தேயிலை, இறப்பர் பயிர்கள் மற்றும் காணி அல்ல. அது அங்கு உயிர் வாழும் மக்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

”இன்றைய ஜனாதிபதி பிரதமராக இருக்கும் போது இதோ இந்த இடத்தில் இருந்து எனக்கு வாக்குறுதி அளித்தார்.

காய்கறி பயிரிட்டு உணவு பிரச்சினையை தீர்த்துக்கொள்ள,
தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு, காணி தருவதாக சொன்னார்.

விவசாய, பெருந்தோட்ட அமைச்சர்களை, எம்முடன் தொடர்பு படுத்தி காணிகள் தருவதாக சொன்னார். அந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக இப்போதும் போகிறது.

இன்று, பிரதமர் ஜனாதிபதி ஆகிவிட்டார். ஆனால் எமது மக்களுக்கு காணி கிடைக்கவில்லை.

அந்த திட்டத்துக்கு பெயரும் வைத்தார். “மனோ கணேசன் பிளான்” என்று சொன்னார். எனக்கு பெயரும் வேண்டாம். வாக்கும் வேண்டாம். அவற்றை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள். எமது மக்களுக்கு காணி கிடைத்தால் எனக்கு போதும்.

இந்த முக்கியமான விடயத்தை நாட்டின் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்காக எதிர்கட்சி தலைவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.

இந்த முக்கியமான விடயம் பேசும் போது இங்கே, விவசாய, கல்வி, பெருந்தோட்ட அமைச்சர்கள் இருக்கிறீர்கள். எங்கே தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்? அவர் இங்கே சபையில் இருந்திருக்க வேண்டும்.

நீங்கள் காணி தருவது ஒருபுறம் இருக்கட்டும். இதை பாருங்கள். உங்கள் தென்மாகாண மாத்தறை தெனியாய மொரவக்க தோட்டத்தில், அப்பாவி தோட்ட மக்கள் விளைவித்த வாழை மற்றும் வீட்டுத்தோட்ட பயிர்களை காடையர்கள் வெட்டி நாசமாக்கி உள்ளனர்.

நாம் இந்நாட்டு பிரஜைகள்தானே? இன்று பிரஜாவுரிமை இருந்தாலும் முழுமையான பிரஜைகளாக நாம் இன்னமும் மாறவில்லை. நாம் இலங்கைக்கு வெளியே வழி தேடவில்லை. இலங்கை என்ற வரம்புக்குள் முழுமையான இலங்கையாராக வாழத்தான் விரும்புகிறோம்.

இன்று கல்வி, சுகாதாரம், எல்லாவற்றிலும் நாம் பின்தங்கி உள்ளோம். எமது மக்களுக்கு விசேட அவதானம் தேவைப்படுகிறது. அதை காட்டுங்கள்”என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *