” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை முதலாளிகள் என்ற பண முதலைகளும், உழைப்பை சுரண்டிய அதிகார வர்க்கமும் அடக்கி ஆண்ட யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போல, அவர்கள் உழைப்பால் உயர்ந்து உச்சம் தொடுவதற்கு என்றும் நாம் பக்கபலமாக இருப்போம். உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலிப்போம்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அவர் விடுத்துள்ள மேதின வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
” உலகிலுள்ள தொழிலாளர்கள் ஓரணியில் திரண்டு உரிமைகளுக்காக போராடி வெற்றிகண்ட – உயரிய வெற்றி திருநாளாகவே மே தினம் நினைவு கூரப்படுகின்றது. தங்களின் உயிரை தியாகம் செய்தே தொழிலாளர் வர்க்கத்துக்கு அன்று உரிமைகள் வென்று கொடுக்கப்பட்டன. தொழிலாளர்கள் உழைப்பால் உயர்ந்து நிற்க, தமது உயிரை தியாகம் செய்த அத்தனை ஊழிய படையினருக்கும் எங்கள் வீர வணக்கம். தொழில்சார் உரிமைகளை வென்றெடுப்பதற்காக எமது மலையக மண்ணில் உயிர் தியாகம் செய்த மலையக தொழிற்சங்க தியாகிகளையும் இந்த உன்னதமான தருணத்தில் நெஞ்சில் இருத்தி நினைவுகூருகின்றேன்.
உழைக்கும் வர்க்கத்தினரின் துயர் துடைக்க இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ் அன்று முதல் இன்று வரை எல்லா வழிகளிலும் போராடியுள்ளது. இனியும் அதே வழியில் தான் பயணிக்கும். அதுமட்டுமல்ல மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களும் உழைப்பால் உயர்ந்து நிற்பதற்கான சகலவித ஏற்பாடுகளையும் செய்வதற்கு இனிவரும் நாட்களில் முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கப்படும்.
இலங்கையில் உள்ள தொழிலாளர்களில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வேறுவிதத்தில் நடத்தப்படும் நிலை காணப்படுகின்றது. இந்நிலைமை மாற வேண்டும். அவர்களும் சமமாக நடத்தப்படும் வகையில் தொழில்சார் சட்டங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும். அதற்காக நாடாளுமன்றத்தில் எமது குரல் ஓங்கி ஒலிக்கும்.
அதேபோல புலம்பெயர் தொழிலாளர்களாக உள்ளோரிலும் எமது மலையக சொந்தங்களின் பங்களிப்பு ஏராளம். அவர்கள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஆடை தொழிற்சாலை, கட்டுமான தொழில் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களின் தொழில்சார் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
உழைக்கும் வர்த்தகத்தின் துயர் துடைக்கவும் உரிமைகளை வென்றெடுக்கவும் காங்கிரஸ் என்றும் உறுதுணையாக நிற்கும். நாட்டையும், வீட்டையும் தமது உழைப்பால் உயர வைக்கும் பாட்டாளி சொந்தங்களுக்கு மே தின நல்வாழ்த்துகள். என்றும் நாங்கள் உங்களுடன் என்றார்.