சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் , கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான நாடல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எனவே இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (21) விடுத்துள்ள விசேட உரையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நாட்டின் அந்நியச் செலாவணியை, அதிகரித்துக் கொள்வதுடன், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் சுற்றுலாவுக்குத் தேவையான பொருட்கள் மீதான இறக்குமதித் தடைகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் இரு தலைவர்களுக்கும் இலங்கை மக்கள் சார்பாக தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இனிமேல் இந்த உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது தொடர்பான உடன்படிக்கை நாளை (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.