இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான அரசாங்கத்தின் யோசணைக்கு ஆதரவு தெரிவித்த வடிவேல் சுரேஷுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று(25) கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான வாக்கெடுப்பு நேற்று(24) பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.
இது கட்சியின் தீர்மானத்திற்கு எதிரானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கான புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவை புதிய நியமனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் 5 ஆம் திகதி கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.