நலீர் அகமட்
இத்தருணத்தில்,நமது நாட்டில் ஒரு பயங்கரமான பொருளாதார மற்றும் சமூக அழிவு நடைபெற்று வருவதாகவும்,
இந்நேரத்தில் கிட்டத்தட்ட 60000 குடும்பங்கள் சுத்தமான குடிநீரை இழந்துள்ளனர் என்றும்,வறட்சியின் காரணமாக இலட்சக்கணக்கான ஹெக்டயர் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளதாகவும், விவசாயிகள் உட்பட ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் இழக்கப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 5,000 பாடசாலை ஆசிரியர்களும் ஏராளமான மருத்துவ நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும்,இதனால், மருத்துவமனைகளின் வார்ட் தொகுதிகள் மூடப்பட்டு அறுவைச்சிகிச்சைகள் கூட இரத்து செய்யப்பட்டுள்ளன என்றும், இந்நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு தேசிய ஒருமைப்பாடு மற்றும் இணக்கப்பாடு கொண்ட தேசிய வேலைத்திட்டமொன்று அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வீழ்ந்த நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இருந்தால்,எதிர்க்கட்சியாக
அனைவரும் அதிகபட்ச ஆதரவை வழங்க விரும்பினாலும் அவ்வாறான வேலைத்திட்டமொன்று தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை என்றும்,அரசாங்கம் விளையாடும் இந்த அரசியல் சூதாட்டங்களை தவிர்த்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறும், இதற்கான அறிவு அரசாங்கத்திற்கு இல்லையென்றால்,எதிர்க்கட்சியிடம் இருக்கும் இதற்குத் தேவையான அறிவையும், மனித வளத்தையும் வழங்க விரும்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடு வீழ்ச்சியடைந்துள்ள நிலைமை தொடர்பில் இன்று(19) விசேட அறிக்கையொன்றை விடுத்தே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பதவிகளை எதிர்பார்த்து அத்தகைய ஆதரவு வழங்கப்பட மாட்டாது என்றும்,220 இலட்சம் மக்களை அவர்கள் இருக்கும் சூழ்நிலையில் இருந்து மீட்கும் நோக்கத்தில் இந்த ஆதரவு வழங்கப்படும் என்றும்,இதற்கான நவீன தொழில்நுட்ப யுக்திகளை பின்பற்றுமாறும், காலாவதியான வேலைத்திட்டங்களைப் பின்பற்றும் கேடுகெட்ட அரசியலை மறந்துவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
பதவிகளுக்கு அடிமைப்பட்டு நாட்டையும் மக்களையும் காட்டிக்கொடுக்க தாம் தயாரில்லை என்றும்,இது போன்ற தேசத்துரோக அரசியல் பேரங்களை நீங்கள் செய்ய விரும்பினால்,வேறு யாரையாவது பார்த்துக்கொள்ளுங்கள் என்றும்,நாட்டின் தேசிய நலனை புறந்தள்ளி விட்டு பெருந்தீனி அரசியலை பின்பற்ற ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
220 இலட்சம் மக்கள் அரச சார்பான ஊடகங்களால் உருவாக்கப்பட்ட போலி யதார்த்தத்தை கண்டு ஏமாற மாட்டார்கள் என்றும்,இந்த தாயகத்தை காப்பாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
வலையொளி இணைப்பு-