இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதற்கு இந்திய சினிமாவின் பிரபல இயக்குநர் பால்கே தீர்மானித்து இருக்கிறார்.
ரசிகர்களால் ‘இசைஞானி’ என அழைக்கப்படும் இளையராஜா, 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். 70களில் தொடங்கிய அவர் இசைப் பயணம் இப்போதுவரை இனிமையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவர் வாழ்க்கைக் கதையைத் திரைப்படமாக்குவது தனது கனவு என்று பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் ஆர்.பால்கி தெரிவித்துள்ளார்.
இவர் அமிதாப்பச்சன் நடித்த‘சீனி கம்’, ‘பா’, தனுஷ், அமிதாப்பச்சன் நடித்த ‘ஷமிதாப்’உட்படப் பல படங்களை இயக்கியுள்ளார்.
இளையராஜா பயோபிக் பற்றி ஆர்.பால்கி கூறியிருப்பதாவது:
தனுஷ் நடிப்பில் இளையராஜா வாழ்க்கைக் கதையைப் படமாக எடுக்க வேண்டும் என்பது என் கனவு. கடந்த மூன்று தலைமுறைகளாக இசை அமைத்து வரும் இசை அமைப்பாளர் அவர். இளையராஜாவின் வாழ்க்கைக் கதையைத் திரைப்படமாக எடுத்தால் அதற்கு தனுஷ் தான் பொருத்தமானவராக இருப்பார்.
இந்தப் படத்தை நான் எடுத்தால் அது தனுஷுக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய பரிசாகவும் இருக்கும். ஏனென்றால் என்னைப் போலவே இளையராஜாவின் மிகத் தீவிர ரசிகர்களில் அவரும் ஒருவர். நடிகராக மட்டுமல்லாமல், எழுத்தாளராகவும் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகவும் அற்புதமான தயாரிப்பாளராகவும் இருக்கிறார் தனுஷ். அவரைத் தவிர நான் பொறாமைப்படும் நபர் வேறு யாரும் திரைத்துறையில் இல்லை. இவ்வாறு ஆர்.பால்கி தெரிவித்துள்ளார்.