குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதற்காக சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான இலவச அரிசி வழங்கும் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2022/2023 பெரும் போகத்தில் அரசாங்க அரிசி கொள்வனவு மற்றும் அரிசி கையிருப்பு அகற்றல் திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைத்திட்டத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்பட்டதுடன், யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை மற்றும் வேலணை பிரதேசங்களை மையமாக வைத்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இத்திட்டம் ஏழை மக்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ள அதேநேரம் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு, விளைந்த அறுவடைக்கு உரிய விலை கிடைத்துள்ளது.