ராமு தனராஜ்

பதுளை பகுதிகளில் ஆலயங்கள் மற்றும் விகாரைகளை உடைத்து அதிலிருக்கும் உண்டியல் பணம் நகைகள் மற்றும் பித்தளை பொருட்களை திருடி வந்த மூவர் பசறை பொலிஸாரினால் கைது.

பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M. பியரட்ண தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை வீதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த போது சந்தேகத்துக்கு இடமான முறையில் பயணித்த ஸ்கூட்டர் ரக உந்துருளி ஒன்றையும் மேலும் ஒரு உந்துருளியையும் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது ஸ்கூட்டர் ரக உந்துருளியின் முன்னால் பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஆலயங்களில் உள்ள பித்தளை பொருட்கள் இருப்பதை அவதானித்துள்ளனர்.

இதன்போது குறித்த உந்துருளியை சோதனைக்கு உட்படுத்திய போது 20500 ரூபாய் சில்லறை காசுகள் மற்றும் தாள் காசுகளும் பித்தளை பொருட்களும் தங்க நகைகள் அடகு வைத்த பற்று சீட்டுகளும் குறடு, கத்தி மேலும் பல ஆயுத பொருட்களும், 3 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 2 உந்துருளிகளும் சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

 

இவர்கள் மீது சந்தேகம் கொண்ட பசறை பொலிஸார் இவர்களை பசறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது ஹொப்டன் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றையும் பசறை பெல்காத்தன்ன பகுதியில் உள்ள விகாரை ஒன்றையும் உடைத்து குறித்த பொருட்களை கொள்ளையடித்ததாக தெரியவந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் பெல்காத்தன்ன விகாரையின் தேரரினால் பெல்காத்தன்ன பகுதியில் அமைந்துள்ள விகாரை நேற்று இரவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக பசறை பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப் பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது உந்துருளியில் பயணித்த 25 வயதுடைய ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் , 29 வயதுடைய ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும், 20 வயதுடைய கனுபெலல பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த இருவரும் கணவன் மனைவி என பசறை பொலிஸார் தெரிவித்ததுடன் கனுபெலல பகுதியைச் சேர்ந்தவர் இவர்களது நண்பர் என தெரியவந்துள்ளது.

இவர்கள் பதுளை பகுதிகளில் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

 

ராமு தனராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *