உத்தர பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில் காசியா பகுதியில் காவல் நிலையம் ஒன்று அமைந்து உள்ளது. இதில் உயரதிகாரியாக பணியாற்றி வருபவர் அசுதோஷ் குமார் திவாரி. நேர்மைக்கும், கண்டிப்புக்கும் பெயர் பெற்றவர்.
அவர் பணியில் இருந்தபோது, ‘போலீஸ் அங்கிள்’ என ஒரு குரல் கேட்டு உள்ளது. சத்தம் வந்த திசையில் திவாரி திரும்பி பார்த்தபோது சிறுவன் ஒருவன் நின்று உள்ளான். காவல் நிலையத்தில் சிறுவனுக்கு என்ன வேலை? என்ற ஆச்சரியத்தில் யோசித்தபடியே, சிறுவனை அழைத்து விசாரித்து உள்ளார்.
அந்த சிறுவனின் பெயர் ஆரியன் மவுரியா (8 வயது) என்பதும், 3-வது வகுப்பு படித்து வருவதும் தெரிந்தது. காசியா பஜார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் ஆரியனின் தந்தை பெயர் தர்மபிரியா மவுரியா.
அந்த சிறுவன் திவாரியிடம் கூறும்போது, தனது தந்தை தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருகிறார். அதன்பின் வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போடுகிறார்.
அதனால், தனது தந்தை குடிக்காமல் இருப்பதற்காக அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும். அப்போதுதான், அவர் குடிக்காமல் இருப்பார்.
அவர் குடிப்பதனால், ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படுகிறது. இது எனக்கான பிரச்சனை மட்டுமல்ல. என்னை போன்ற லட்சக்கணக்கான குழந்தைகள் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்.
அதனாலேயே நான் காவல் நிலையத்திற்கு வந்துள்ளேன் என கூறி அதிர்ச்சி அடைய செய்துள்ளான். இதனை கேட்ட காவல் உயரதிகாரி திவாரி, சிறுவனை தேற்றினார். அதன்பின், உனது தந்தையை அழைத்து, சத்தம் போடுகிறேன் என்று சிறுவனுக்கு உறுதி கூறியுள்ளார்.
இதன்படியே, சிறுவனின் தந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து, ஆலோசனை வழங்கி, இனி குடிக்க கூடாது என உறுதிமொழி எடுக்கும்படி செய்துள்ளார்.
பொறுப்புள்ள அதிகாரியாக கடமையை செய்த திவாரி, சிறுவனுக்கு இனிப்புகள், புத்தகங்களை வழங்கியதுடன், ஆரியனின் கல்வி செலவுகளை ஏற்க உதவவும் முன்வந்துள்ளார்