மாத்தளை மாநகரசபைக்குட்பட்ட களுதாவளை 2 ஆம் வட்டாரம், சிந்தாகட்டி குமர பெருமாள் கோவிலை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகத் திட்டத்தை கையளிக்கும் நிகழ்வு நேற்று (23.04.2023) இடம்பெற்றது.

சிந்தாகட்டி குமர பெருமாள் கோவிலை அண்மித்த பகுதிகளில் 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. குடிநீர் வசதி இன்மையால் அப்பகுதி மக்கள் சொல்லொணாத் துயரங்களை பல வருடங்களாக சந்திக்க நேரிட்டது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அண்மையில் மாத்தளைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது களுதாவளை பகுதி மக்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது மக்கள் முன்வைத்த குடிநீர் வேலைத்திட்டம் நிச்சயம் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்திருந்தார்.

இந்த உறுதிமொழியின் பிரகாரம் அம்மக்களுக்கு தற்போது குடிநீர் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

குடிநீரை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு நேற்று சிந்தாகட்டி குமர பெருமாள் கோவிலை அண்மித்த பகுதியில் நடைபெற்றது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அத்தோடு, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளருமான எம்.இராமேஷ்வரன், மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட, முன்னாள் மாத்தளை மாநகர மேயர் சந்தானம் பிரகாஷ் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிவஞானம் ஆகியோரும் பங்கேற்றனர்.

தமது கோரிக்கையை ஏற்று குடிநீரை பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு, மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *