ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 08 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில், குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கமைய, தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி வண.எல்லாவல மேதானந்த தேரர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தார்.
விகாரைக்குச் சொந்தமில்லாத காணிகளை பொதுமக்களிடம் கையளிக்குமாறு பணிப்பரை விடுக்கப்பட்டதாக ஊடகங்கள் மூலம் அறியமுடிந்தது.
விகாரையை சுற்றிலும் பல்வேறு பௌத்த விஹாரைகளின் இடிபாடுகள் சிதறிக்கிடப்பதால் அங்குள்ள காணிகளை பகிர்ந்தளிப்பது பொறுத்தமற்றதெனவும் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். தற்போதைக்கு அரச காணிகளை பகிர்ந்தளித்தாலும் பகிர்ந்தளிக்காவிட்டாலும் தவறாக பலவந்தமாக காணிகள் கையகப்படுத்தப்பட்டிருப்பதாக அறியமுடிந்துள்ளது.
அதனால் மேற்படி காணிகளின் உரிமத்தை பிறருக்கு வழங்கக்கூடாது எனவும் அவரது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளரினால் தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரருக்கு 2023 ஜூன் 15 திகதியிடப்பட்ட பதில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குருந்தி விகாரையானது இலங்கையர்களான எமது தொல்பொருள் சின்னமாகும். அதனால் குருந்தி விகாரையின் காணிகளை ஏனையவர்களுக்கு வழங்குவதற்கான தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணப்படுகின்ற காணி பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும்போதும் 1985 களில் காடுகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்கள் அவ்வண்ணமே பாதுகாக்கப்பட வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பதில் கடிதத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.