“தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் நல்லுறவு நீடிக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். ஆனால் முற்போக்கு கூட்டணியில் உள்ள எம்.பியொருவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பில் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் தான் அவர் கண்டி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் கூட வந்தார் என்பதையும் கூறியாக வேண்டும்.” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (24.05.2023) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசால் வழங்கப்படுகின்ற நலன்புரி திட்டங்கள் தொடர்பில் நான் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தேன். மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துகள் வெளியிடப்படக்கூடாது என கோரியிருந்தேன். இது கட்சிகளுக்கிடையிலான மோதல் கிடையாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கும் பட்டியலை வெளியிடும் சுதந்திரம் உள்ளது. எமக்குள்ள சுதந்திரத்தின் அடிப்படையில் நாம் அதனை வெளியிட்டோம்.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் நல்லுறவு நீடிக்க வேண்டும். தாக்குதல் அரசியலை நாம் எதிர்க்கின்றோம்.  ஆனால் தமிழ் முற்போக்கு கூட்டணியில் உள்ள பிரதான கட்சியொன்றின் உறுப்பினர் ஒருவர், சம்பந்தமே இல்லாமல் காங்கிரஸை விமர்சித்து வருகின்றார்.. நாம் முன்வைக்கும் விடயங்களில் தவறு இருந்தால் அதனை சுட்டிக்காட்டி விமர்சிக்கலாம்.  அதைவிடுத்து காங்கிரஸால் தான் மக்கள் இப்படியுள்ளனர் என்பதை ஏற்கமுடியாது.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு சுயாதீன ஆணைக்குழுவாகும். அதன் தலைமைப்பதவியை வகிப்பவர் சுயாதீனமாக இருக்க வேண்டும். ஆனால் ஜனக ரத்னாயக்க அரசியல் கோணத்தில் செயற்பட்டார். அறிக்கைகளை விடுத்து மக்களை குழப்பினார். சில நேரங்களில் தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை அனுமதிக்க முடியாது. சுயாதீன ஆணைக்குழுவென்பது சுயாதீனமாக செயற்பட வேண்டும். சொந்த நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதாக அது இருக்ககூடாது.

அத்தோடு, எரிசக்தி, மின்சக்தி அமைச்சு முன்னெடுக்கும் மறுசீரமைப்புக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்றார்.

ஊடக செயலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *