கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தீ விபத்து 05.03.2023 அன்று இரவு 09.30ளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் பசார் பகுதியில் வீதிக்கு அருகாமையில் உள்ள ஒரே கட்டிடத்தில் அமையப்பெற்றுள்ள தளபாட கடை மற்றும் வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

திம்புள்ள பத்தனை பொலிஸார், மற்றும் பிரதேச பொது மக்கள், நுவரெலியா மாநகர சபையினரின்  தீயணைப்பு பிரிவினர், கொட்டகலை இராணுவத்தினர், இராணுவத்தின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 4 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீயணைப்பு படையினர் விரைந்து வந்திருந்தால் இந்த பாரிய அனர்த்தத்தை கட்டுப்படுத்திருக்கலாம்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அண்மித்த பகுதியில் கொட்டகலை பிரதேச சபையில், தீயணைப்பு வாகனம் இல்லை என்பதால், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் உடனடியாக நுவரெலியா மாநகர சபையினரின்  தீயணைப்பு பிரிவினரை வரவழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

தீக்கிரையாகிய இவை அனைத்தும் ஒரே உரிமையாளருக்கு சொந்தமானதாகவும், சம்பவம் இடம்பெற்ற வேளை உரிமையாளர் மற்றும் அவரின் மனைவி ஆகியோரே இருந்துள்ளதாகவும், எனினும் அவர்களை எந்தவித காயங்களும் ஏற்படாமல் காப்பாற்றியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தீயினால் சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாகவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடம்பெற்ற போது, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புக்கு அமைய ஸ்தலத்திற்கு விரைந்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்ததோடு, இவ்வாறான சம்பவங்கள் இனிமேலாது இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொட்டகலை பிரதேச சபைக்கு பணிப்புரை விடுத்தார்.

(அந்துவன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *