சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டத்தை உருவாக்குமாறு சட்டத் துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஒரு சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை விரைவாக தடுக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான செயல்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டக் கட்டமைப்பு ஒன்றின் அவசியத்தையும்வலியுறுத்தியுள்ளார்.
களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், களுத்துறை தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரால் 16 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றமை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கினார்.