அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார்.

 

இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, பாஜகவிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. இருப்பினும் அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவான கருத்துகளும் குவிந்தவண்ணம் உள்ளன. இதனிடையே பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களிடம் சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஊழலை மறைக்க மொழி, மதங்களுக்குப் பின்னால் பாஜக ஒளிந்துகொள்ளும் என அமைச்சர் உதயநிதி கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், ஊழல் ஒழிப்பு நாடகத்தோடு ஆட்சிக்கு வந்த பாசிஸ்ட்டுகள், பணமதிப்பு நீக்கத்தில் தொடங்கி, ரஃபேல் ஊழல், சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திய தேசிய நெடுஞ்சாலை ஊழல், ஆயுஷ்மான் பாரத் ஊழல், டோல்கேட் ஊழல் என ஊழலின் மொத்த வடிவமாக மாறிப்போயுள்ளனர். ரூ.900 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழை நீர் ஒழுகுகிறது. ரூ.2700 கோடியில் அமைக்கப்பட்ட ஜி20 மண்டபத்தில் வெள்ளம் தேங்குகிறது.   இப்படி எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதை மறைக்க மொழி – மதம் – கலவரத்தின் பின் ஒளிந்து கொள்ளும் பாஜகவை, மக்களின் கோபமும் – இந்தியா(I.N.D.I.A)-வின் வலிமையும், 2024 தேர்தல் களத்தில் மூழ்கடிக்கப்போவது உறுதி” என பதிவிட்டுள்ளார்.

 

டெல்லியில் நடந்து வரும் ஜி-20 மாநாட்டிற்கு 2,700 கோடி ரூபாயில் தயார் செய்யப்பட்ட பாரத் மண்டபத்தில் மழைநீர் நுழைந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ் 2,700 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட பாரத் மண்டபத்தில் எப்படி மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *