பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜோகோவிச் 7-6 (7-1), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் நோவக் ஜோகோவிச் வென்றுள்ள 23வது பட்டம் இதுவாகும்.
இதன் மூலம் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றிருந்த ஸ்பெயினின் ரஃபேல் நடாலின் (22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்) சாதனையை முறியடித்துள்ளார் ஜோகோவிச்.
பிரெஞ்சு ஓபனில் வாகை சூடிய ஜோகோவிச், டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார்.
முதலிடம் வகித்த ஸ்பெயினின் கார்லோஸ் அல்கரஸ் 23வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவும் ஓர் இடம் பின்தங்கி 3வது இடத்தில் உள்ளார்.
இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த காஸ்பர் ரூட் 4-வது இடத்தில் தொடர்கிறார்.
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), ஹோல்கர் ரூன் (டென்மார்க்), ரூப்லெவ் (ரஷ்யா), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), ஜன்னிக் ஷின்னர் (இத்தாலி), கரண் கச்சனோவ் (ரஷ்யா) ஆகியோர் முறையே 5 முதல் 10வது இடங்களில் உள்ளனர்.
14 முறை பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபேல் நடால் 121 இடங்கள் பின்தங்கி 136வது இடத்தில் உள்ளார்.
இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர், நீண்ட நாட்களாக டென்னிஸ் போட்டிகளில் விளையாடாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.