ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் பாராட்டுகிறேன். முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின்“தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்றுக்கு உரிய இடத்தை ஏற்றால், அது இன்று நாம் எதிர்கொள்ளும் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் சாவியாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,   

தமிழரசு கட்சியினருடனான கலந்துரையாடலின் போது தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில பணிப்புரைகளை விடுத்துள்ளார். அதன்போது இலங்கை தீவின்“தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு, ரணில் விக்கிரமசிங்க கருத்து கூறியுள்ளார்.

இப்படி ஒரு தமிழ் பெளத்த வரலாறு இருப்பதை சிங்கள தீவிரர்கள் எப்போதும் மறைக்க விரும்புகிறார்கள். அந்த விஜயன் வந்த இறங்கிய கதை பொய்யென்று என்னை தேடி வந்து வண. பிக்கு ஞானசாரர் சொன்னது போன்றும், இளவரசன் விஜயன் வரவை நினைவுகூர்ந்து, இலங்கை அஞ்சல் திணைக்களம் முத்திரை வெளியிட்டு, பின்னர் அதை இரண்டு வருடங்களில் வாபஸ் பெற்றதை போன்றும், வெறும் கைகளால் சூரியனை மறைப்பதை போன்றும், வரலாற்றில் தமிழர்களுக்கு உரிய இடத்தை இவர்கள் எப்போதும் மறைக்க முயன்று வருகிறார்கள்.

தமிழ் பெளத்த வரலாறு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், இன்று நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் என்ற பூட்டுக்கு அது சாவியாக அமையும் என நான் நம்புகிறேன்.

இந்நோக்கில், 2018ம் வருடம் நான் அமைச்சராக இருந்த போது ஒரு காரியம் செய்தேன்.

பிரபல சிங்கள வரலாற்றாசிரியர், சினிமா எழுத்தாளர் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, இலங்கையின் தமிழ் பெளத்த வரலாற்றை பற்றி சான்றுகளுடன் எழுதிய, “தமிழ் பெளத்தன்” (தமிழ பெளத்தயா) சிங்கள நூல் நாட்டில் பாவனையில்  இல்லாமல் இருந்தது. அந்த நூலை தேடி பிடித்து, பேசி, பேராசிரியரின் அனுமதியை பெற்று அதை எனது அமைச்சின் செலவில் மறுபிரசுரம் செய்து, நாட்டின் சிங்கள பாடசாலைகளுக்கும், விகாரைகளுக்கும் இலவசமாக அனுப்பி வைத்தேன்.

அதன்பின் பேராசிரியர் ஆரியரத்னவை அழைத்து சில வண. பிக்குகள் கண்டித்துள்ளார்கள், என அறிந்தேன். என்னுடன் முரண்பட எவரும் வரவில்லை. இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை போட்டு கிழிப்பார்களோ தெரியவில்லை. அவரை அந்த கெளதம புத்தனும், கதிர்காம கந்தனும் காப்பாற்றட்டும்.  என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *