டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நுளம்புகள் மூலம் டெங்கு பரவுவதால், அனைத்து காய்ச்சல் நோயாளிகளையும் நுளம்புகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தை மக்களிடம் விரைவில் கொண்டு செல்ல வேண்டும் என டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் தலைவி இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.

எனவே, டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களைப் போன்று டெங்கு நோய்ப் பாதிப்பு உறுதிப்படுத்தப்படும் வரை காய்ச்சல் ஏற்பட்டுள்ள அனைத்து நோயாளிகளையும் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துவதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும், அது தொடர்பில் மக்களைத் தெளிவூட்ட ஊடகங்களின் ஆதரவு தேவை எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட மேல்மாகாண உபகுழு நேற்று (14) மேல்மாகாண தலைமைச் செயலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் கூடியபோதே இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் டெங்கு ஒழிப்புக்கான அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டதுடன், அந்த நிபுணர் குழு மாகாண மட்டத்தில் 09 உப குழுக்களையும் நியமித்துள்ளது.

நிபுணர் குழுவின் தலைவி இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தலைமையில் கூடிய மேல்மாகாண உபகுழு, எதிர்வரும் சில தினங்களுக்குள் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியது.

தற்போதைய சூழ்நிலையானது நோய்க் காரணி மற்றும் வைரஸின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சந்தர்ப்பம் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *