நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வார காலத்திற்கு பின்னும், தெற்கு துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய நபர்களின் குரல் இன்னும் கேட்கிறது என மீட்பு குழுவினர் கூறுகின்றனர்.
துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ஆம் திகதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில்
நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.
இதன் தொடர்ச்சியாக 100-க்கும் மேற்பட்ட நிலநடுக்கமும் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 41 ஆயிரம் எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. எனினும், நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வார காலம் ஆன பின்னும், தெற்கு துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள நபர்களின் குரல் இன்னும் கேட்கிறது என மீட்பு குழுவினர் கூறுகின்றனர்.
இதனால், இன்னும் பலரை மீட்க கூடிய சாத்தியம் உள்ளது என்ற நம்பிக்கை லேசாக ஒளிர்கிறது. நேற்று இடிபாடுகளில் இருந்து 9 பேர் மீட்கப்பட்டனர்.