டெங்கு ஒழிப்பு செயலணியுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, தற்போது டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் விரிவான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் 2023 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியை ஒப்பிடும்போது, தற்போது சுமார் 2000 டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் 11,000 நோயாளர்கள் பதிவாகியதாகவும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை விட அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை கடுமையாக முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
டெங்கு பரவலைக் மட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுத்தம் செய்யும் தினமாக அறிவிக்க தற்போது சுகாதார அமைச்சு முன்மொழிந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்தின் அண்மைய தரவுகளின்படி, இந்த ஆண்டு டெங்கு நோயினால் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2023 ஜனவரி மாதம் முதல் மே 16 வரை நாடளாவிய ரீதியில் 34,511 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதன்படி, அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 17 049ஆகும். கம்பஹா மாவட்டத்தில் 7,797 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 7,219 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 2,033 பேரும் பதிவாகியுள்ளனர்.
மேலும்,புத்தளம் மாவட்டத்தில் 2,463 நோயாளர்களும் பதிவாகியுள்ளதோடு தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று (16) வெளியிட்ட தரவுகளின் பிரகாரம் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இருந்து 2,033 நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இணைப்பு 01 இல் அந்த விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் 59 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக டெங்கு அபாயமுள்ள வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை கண்டறிந்து சுத்தம் செய்யும் நடவடிக்கைகளுக்கு, அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்தல், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் கடை வளாகங்களை சோதனை செய்தல், ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவூட்டல், டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்படும் பகுதிகளுக்கு சென்று டெங்கு நுளம்புகளின் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்தல், புகை அடித்தல் மற்றும் இடங்களை பரிசீலித்து டெங்கு நோயை பரப்பும் நுளம்புக் குடம்பிகளை இனங்காணல், வீடுகள் மற்றும் நிறுவனங்களை சுத்தமாக வைத்திருக்கத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல், போன்றவற்றின் ஊடாக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் வெற்றியடைய சுகாதார திணைக்களத்தின் தலையீடு மட்டும் போதுமானதாக இல்லை எனவும் மக்களின் ஆதரவும் அதற்குத் தேவை எனவும் சுகாதாரத் துறை மேலும் வலியுறுத்துகின்றது.