இலங்கைக்குள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பெற்றோலியப் பொருள் இறக்குமதி, களஞ்சியம், விநியோகம் மற்றும் வியாபார நடவடிக்கைளுக்காக இலங்கை அரசாங்கம் ,ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks Inc) நிறுவனத்துடன் நீண்ட கால ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பீ.டீ.யூ.கே.மாபா பத்திரன மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் தலைவர் ஜெஸ்டின் டிவிஸ்(Justion Divis) ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டதன் பின்னர் ஆர்.எம். பார்க்ஸ் நிறுனவனம் ஷெல் நிறுவனத்துடன் இணைந்து 45 நாட்களுக்குள் முன்னெடுப்புக்களை ஆரம்பிக்க இந்த ஒப்பந்தத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.
கடன் பத்திரங்களை திறந்து பட்டியல்களை மீளச் செலுத்துவதற்கு போதியளவான வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் கடந்த காலத்தில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் எரிபொருள் இறக்குமதியில் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தன.
அதனால் நுகர்வோருக்கு தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக மேற்படி மின்சக்தி எரிசக்தி அமைச்சினால் இந்த மூலோபாயத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.