அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாகத் திகழும் அதிகளவான நட்சத்திர விடுதிகளையும், அழகிய கடற்கரை அமைப்பினையும் கொண்ட கோறளைப்பற்று பாசிக்குடா பகுதியில் சுற்றுலாத்துறையினை மேலும் மேம்படுத்தி அதனூடாக மாவட்டத்திற்கான வருமான மட்டத்தினையும், இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களையும் அதிகரிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் நட்சத்திர விடுதி உரிமையாளர்கள் மற்றும் ஏனைய சுற்றுலா விடுதி உரிமையாளர்கள், முகாமையாளர்களுடன் இடம்பெற்றது.
அதன் போது தாம் இச்செயற்திட்டங்களை முன்னெடுப்பதில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சருக்கு தெளிவுபடுத்தியிருந்தனர்.
அதற்கிணங்க மிகவிரைவில் நகர அபிவிருத்தி அதிகாரசபை, பிரதேசசபை மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் உட்பட ஏனைய துறைசார் அரச திணைக்களங்களுடன் இணைந்து குறித்த நோக்கத்தினை அடைவதற்கு தேவையான பணிகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான விசேட திட்டவரைபொன்றினை ஒழுங்கமைத்துக் கொள்வது தொடர்பிலான விசேட தீர்மானமும் அக் கூட்டத்தின் போது எட்டப்பட்டிருந்தது.
அதற்கமைய நேற்றைய தினம் கோறளைப்பற்று பாசிக்குடா பகுதிக்கான குறித்த விசேட மேற்பார்வை களவிஜயத்தினை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் முன்னெடுத்திருந்தார்.
அதனுடன் இணைந்ததாக சுற்றுலா பயணிகளை கவரும் முகமாக கோறளைப்பற்று பிரதேச சபையால் கடற்கரையினை அண்டியதாக அமைக்கப்படவுள்ள கடைத்தொகுதிகள் தொடர்பிலும் அதற்கான திட்டங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது பிரதேச செயலாளர் திருமதி திருச்செல்வம், உதவிப் பிரதேச செயலாளர் அமலினி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கங்காதரன், கோறளைப்பற்று பிரதேசசபை செயலாளர் நவநீதன், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளருமான தம்பிராஜா தஜீவரன் உட்பட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.