நூருல் ஹுதா உமர்

நாவலடி காணி விவகாரத்தில் இடம்பெற்றுள்ள இனவாத செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சட்டரீதியாக நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கை 13ம் திருத்த சட்டமூலத்தின் பிரகாரம் மீளவும் இணைத்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தமிழ் தரப்பு கோரிவரும் இந்நிலையில் பிரிந்த வடக்கு கிழக்கிலையே சாணக்கியன் எம்.பி போன்றவர்களின் அடாவடித்தனம் இவ்வாறு இருக்கிறது என்றால் இணைந்த வடகிழக்கில் முஸ்லிங்களின் வாழ்வியல் நிலை என்ன ? என்று கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ. கலீலுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் முகத்திரை கிழிந்து அவரின் சொந்த முகம் இந்த நாவலடி விடயத்தில் அப்பட்டமாக வெளியாகியுள்ளது. அவருடன் இணைந்து பீ 2பீ பயணம் சென்ற முஸ்லிம் மக்களின் மூத்த அரசியல்தலைவர்கள் உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அன்றும் சொன்னோம் இன்றும் சொல்கிறோம் முஸ்லிம் அரசியலின் வீரியத்தை குறைத்து தங்களின் எண்ணங்களை நிறைவேற்ற இவர்கள் நாடகம் நடிக்கிறார்கள் என்று.

வீழ்ச்சி பாதையில் முஸ்லிம் அரசியல் சென்றுகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் முஸ்லிம் இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று முன்னுக்கு வந்து தங்களின் உரிமைகளை பற்றி பேச, வாதிட, போராட வேண்டும்.  வடக்கு-கிழக்கில் பாரம்பரிய அரசியலை செய்து கொண்டு, பயங்கரவாத புலிகளினால் கொல்லப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்களை காட்டி அரசியல் செய்த முஸ்லிம் தலைவர்கள் மூலமாக முஸ்லிங்களுக்கு எந்த நன்மையையும் கிட்டவுமில்லை இனியும் கிட்டப்போவதில்லை. ஜனாஸாக்களை காரணம் காட்டி வந்த அரசியல் தலைமைகளின் வழிகாட்டலினால் முஸ்லிம் சமூகமும் ஜனாஸாக்கள் போன்றே இன்று இருக்கிறது.

புலிகளினால் பாதிக்கப்பட்ட முஸ்லிங்களை பற்றி கூட முஸ்லிம் தலைவர்கள் பாராளுமன்றத்தில் கதைக்கிறார்கள் இல்லை. காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, பொலநறுவை போன்ற எத்தனை ஊர்களில் கொத்துக்கொத்தாக விடுதலை புலிகளின் பசிக்கு முஸ்லிங்கள் இரையானார்கள் இவற்றையெல்லாம் பேசாமல் புலிகள் முஸ்லிம் ஜனாஸாக்களை எரித்தவற்றையெல்லாம் மறந்து கொரோனா ஜனாஸாக்களை மட்டும் அடிக்கடி மீட்டிக்கொண்டு முஸ்லிம் தலைவர்கள் வங்காரோத்து அரசியல் செய்கிறார்கள்.

2000 க்கு பின்னர் பிறந்த முஸ்லிம் சந்ததிகளுக்கு வடக்கு கிழக்கின் கடந்தகால அரசியல் பற்றிய அறிவு போதாது. வடகிழக்குக்கு வெளியே இருந்த இளைஞராக தொடர்ந்தும் நாங்கள் எங்களின் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக குரல்கொடுத்துள்ளோம். துண்டுப்பிரசுரங்கள் மூலமாக நாட்டை விழிப்புணர்வு செய்துள்ளோம், வடக்கு கிழக்கில் முஸ்லிங்கள் பாதிக்கப்பட்ட போது கொழும்பில் கடையடைத்து போராட்டம் நடத்தியுள்ளோம். அந்த காலத்தில் இப்போதுள்ள கல்முனை தொகுதி எம்.பி ஹரீஸ் தலைமையிலான மெஸ்ரோ கிழக்கில் புலிகளை எதிர்த்து முஸ்லிங்களின் இருப்புக்காக போராடியது. அவருடன் அந்த காலத்திலையே நாங்கள் தொடர்புபட்டு இணைந்து முஸ்லிங்களுக்காக குரல்கொடுத்துள்ளோம்.

முஸ்லிம்களின் அரசியல் விடயங்கள் மந்தகதியில் உள்ளதாலும் முஸ்லிம் தலைவர்களின் அரசியல் நடவடிக்கை சோரம் போகும் தன்மையாக இருப்பதனாலும் முஸ்லிம் இளைஞர்களின் அரசியல் செயற்பாடுகள் போதாமல் உள்ளது. முஸ்லிம் அரசியலை மேம்படுத்த முஸ்லிம் இளைஞர்கள் துணிந்து முன்வந்து அரசியலில் விழிப்புணர்வு பெற்று உரிமைகளுக்காக உரத்து குரல்கொடுக்க முன்வரவேண்டும். – என்றார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *