மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா செவ்வாய் கிழமை (15) காலை இடம்பெற்றது.
இப்பெருவிழாவின் கூட்டுத்திருப்பலியானது நொன்சியோ என அழைக்கப்படும் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிறையன் உடகவெ ஆண்டகையின் தலைமையில் மன்னார் , அனுராதபுரம் . காலி மறைமாவட்ட ஆயர்கள் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை , நோபேட் அன்றாடி ஆண்டகை , றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை மற்றும் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வல் சில்வா ஆண்டகை ஆகியோர் இணைந்து பெருவிழாத் கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
ஏதிர்பார்த்ததுக்கு அமைவாக நாட்டில் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் அருட்பணியாளர்கள் துறவியர்கள் என சுமார் ஆறு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
நீண்ட இடைவெளிக்குப்பின் இம்முறையே இவ்வாறான பெருந்தொகையினர் இதில் கலந்து இவ்விழாவை சிறப்பித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
அத்துடன் இவ்விழாவில் இம்முறை பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிறையன் உடகவெ ஆண்டகை மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டமை சிறப்பு அம்சமாகக் காணப்பட்டது.
இத்திருப்பலி வேளையில் பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிறையன் உடகவெ ஆண்டகையின் மறையுரையை மன்னார் மற்றும் காலி மறைமாவட்ட ஆயர்கள் தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்த்து உரை நிகழ்த்தினர்.
திருப்பலி முடிவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தனது மறைமாவட்ட மக்களுக்கு மடுத்திருப்லியில் வருடத்தில் இருமுறை வழங்கும் அப்போஸ்தலிக்க பரிபூரண ஆசிருக்குப் பதிலாக திருத்தந்தையின் அப்போஸ்தலிக்க ஆசீரை பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிறையன் உடகவெ ஆண்டகை அவர்களால் அனைத்து மறைமாவட்ட மக்களுக்கும் இத்திருத்தலத்தில் கூடியிருந்த மக்கள் யாவருக்கும் திருச்சபையின் தாய் மொழியாம் லத்தீன் மொழியில் வழங்கப்பட்டது.
இது புனிதர்களினதும் எப்பொழுதும் கன்னியான கன்னி மரியாளின் பரிந்துரை வேண்டப்பட்டு பாவ மன்னிப்பும் பலன்தரும் வாழ்வும் வேண்டப்பட்ட ஆசீராக இது அமைந்திருந்தது.
இதைத் தொடர்ந்து அன்னையின் திருச்சுரூப பவனி இடம்பெற்றதுடன் திருச்சுரூப ஆசீரை பாப்பரசரின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிறையன் உடகவெ ஆண்டகை வழங்கினார்
இவைகள் நிறைவுற்ற பின் ஜனாதிபதி பீடத்துக்கு முன்பாக நின்று அங்கு கூடியிருந்த மக்களுக்கு உரையும் ஆற்றினார்.
ஜனாதிபதியின் வருகையினால் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு பக்தர்கள் கையில் கொண்டு வந்த பைகள் கடுமையாக சோதிக்கப்பட்டே திருப்பலி நடக்கும் இடத்துக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
(வாஸ் கூஞ்ஞ)