பா.நாகேந்திரன்
1823ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மலையகத்தில் உள்ள தோட்டங்களில் வேலை செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட முதல் தொகுதி மக்கள் பயணித்த பாதையை மீட்டெடுக்கும் மலையக மக்களின் உரிமைகளை வலியுறுத்தும் மலைய எழுச்சி பேரணி இன்று சனிக்கிழமை (12) மாத்தளையில் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது.
தலைமன்னார் முதல் மாத்தளை வரையான மலையக எழுச்சிப் பயணத்தின் நிறைவு நாளான இன்று சனிக்கிழமை (12) பிற்பகல் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவிலான பேரணி மாத்தளையை அடைந்தது.
மலையகம் 200ஐ முன்னிட்டு கடந்த 16 நாட்களாக இடம்பெற்றுவந்த மலையக எழுச்சி நடைபவனி இன்று மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தை அடைந்ததோடு நிறைவுபெற்றது.
அதனை தொடர்ந்து, பயணத்தின் இலக்கு, மலையக மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலான நடைபவனி நிறைவு நிகழ்வு மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைப்பெற்றது.
மேலும், மலையக மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மாத்தளை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ என்கிற தொனிப்பொருளில் இந்த நடைபவனி நிகழ்வு கடந்த ஜூலை 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தலைமன்னாரில் ஆரம்பமானது.