எல்கடுவ பெருந்தோட்டத்துக்குச் சொந்தமான மாத்தளை ரத்வத்த கீழ் பிரிவில் பிரிட்டிஷ் நிர்வாகம் கட்டிக்கொடுத்த வரிசை முகாமில் (LINE CAMP) 14 குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து வாழ முடியாத நிலையில் முகாமையாளரின் அனுமதியுடன் கட்டிய வீட்டை அதே நிக்வாகம் உடைத்து நிர்மூலமாக்கியதை எமது பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எட்டு பேரும். அறிவீர்கள் என மூத்த அரசியல்வாதியும் மத்திய மாகணத்தின் முன்னாள் பிரதி தலைவருமான முருகன் சிவலிங்கம் தனது ஆதங்கத்தை வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் கம்பெனிகளுக்கு இந்த அதிகாரத்தை அரசாங்கமே கொடுத்துள்ளது. 99 ஆண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தம் முடிவதற்கு இன்னும் 68 ஆண்டுகள் இருக்கின்றன. அந்தக் காலம் முடியும் வரை இந்த கம்பெனி அதிகாரம் நடந்துக் கொண்டே இருக்கும். அரசாங்கமே தனது 1987ம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபை சட்டமூலம் தோட்ட நிலங்களை வர்த்தக நிலம் என்று பிரகடனப் படுத்தி விட்டது.
இந்த நிலைமையில் உங்கள் எட்டு உறுப்பினர்களின் சமூக உணர்வு கருதி என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றீர்கள் என்று முழு மலைநாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது என அவர் தனது முகநூல் ஊடாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு அறிக்கை
உடலை ,உழைப்பை ,உயிரைக்கொடுத்து நாட்டை வளப்படுத்தி 200 ஆண்டுகாலம் வாழ்ந்த மக்களின் துயரமோ ஓய்ந்த பாடில்லை .
நில உரிமை ,காணி உரிமை அற்ற மக்களாக அவர்கள் படும் பாடு சாதரணமல்ல…
அவ்வகையில் ,மாத்தளை ,எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட ,ரத்வத்த கீழ்பிரிவில் ,மூன்று குடும்பங்கள் உள்ளடங்களாக 14 பேர் ஒரே லயன் அறையில் தொடர்ந்து வாழ்ந்து வந்த நிலையில்,தமக்கு வீடொன்றையோ, வீடமைக்க காணித்துண்டொன்றையோ வழங்குமாறு பல வருடங்களாக பல தோட்ட முகாமையாளர்களிடம் இக்குடும்பத்தினர் கேட்டு வந்துள்ளனர்.
அவ்வகையில் தற்போதுள்ள முகாமையாளருக்கு முன்பிருந்தவர் , ஒரு இடத்தைக்காட்டி இங்கு வீடமைத்துக்கொள்ளுங்கள் என அனுமதி வழங்கிய நிலையில் ,குறித்த குடும்பத்தினர் வாழைமரம் உள்ளிட்ட சில பயிர்களையும் அவ்விடத்தில் நாட்டியதுடன்,ஒரு கிழமைக்கு முன் அவ்விடத்தில் தற்காலிக குடியிருப்பொன்றை அமைத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு இன்று தனது அதிகாரிகள் சகிதம் வருகை தந்த உதவி முகாமையாளர், அந்த குடியிருப்பை உடைத்து பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளமையையும் அறியக்கிடைத்தது.
மேற்குறித்த சம்பவம் ,சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து ,குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய சட்டரீதியான விடயங்கள் மற்றும் மேலதிக விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. என தனது அறிக்கையில் கூறியுள்ளது.