ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாமர மக்களின் கட்சி. அது மாமூல் அரசியல் செய்வதில்லை. அதனைப் பலப்படுத்த எல்லோரும் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார்.

பெருந்தலைவர் மர்ஹீம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 23வது நினைவு தின நிகழ்வு மற்றும் கட்சிப்புனரமைப்பு சம்பந்தமான கலந்துரையாடல் நேற்று (01) கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம்களின் பிரச்சினைகளை மிகத்தைரியமாக எடுத்துக்கூறுகின்ற ஒரேயொரு முஸ்லிம் கட்சி எமது கட்சியாகும். அது ஒரு போதும் நிதானம் இழந்து விடுவதில்லை. முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை தனி நபர்கள் முக்கியமல்லர். இந்த இயக்கம் நீண்டகாலம் வாழ வேண்டும். அது எப்போதும் முஸ்லிம் சமூகத்திற்கு குரல் கொடுக்க வேண்டும். அது தான் முக்கியமாகும்.

இலங்கை முஸ்லிம்கள் இன்று நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரே ஒரு சமூகக்கட்சியாகவும் எமது மக்களின் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெற்ற தனித்துவக்கட்சியாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்குகிறது.

இன்று முஸ்லிம் காங்கிரஸ் சரியான பாதையில் நிதானமாக, நேர்மையான தலைமைத்துவத்தின் கீழ் பயணித்துக்கொண்டிருக்கின்றது. அதனை உடைக்க இன்று பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

அதற்கு நாம் பலிக்கடாவாக மாற முடியாது. எமது இயக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதன் தலைமையை ஊக்குவிக்க வேண்டும். அது எமது கடமை. அப்போது தான் நாம் எமது உரிமைகளை வென்றெடுக்கலாம்.

முஸ்லிம் காங்கிரஸின் கட்டமைப்பும் அடிப்படையும் பிரதேச வாதங்களாலும் பதவி மோகங்களாலும் தனிநபர் முரண்பாடுகளாலும் சிதைந்து போகாதவாறு அதே கட்டுக்கோப்புடன் இருப்பதில் எப்பொழுதும் முஸ்லிம் சமூகம் செயற்பட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு பலம் முஸ்லிம் காங்கிரஸ் தான். மக்கள் சக்தி அதற்குத்தான் இருக்கின்றது. எமது கட்சிக்காக தியாகம் மற்றும் அர்ப்பணிப்புடன் தொண்டாக்கூடியவர்களைக் கொண்டு கட்சிக்கட்டமைப்பினை உருவாக்க வேண்டும்.

கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகளுக்கப்பால் மக்கள் அனைவரும் ஐக்கியத்தைக் கடைப்பிடித்து பெருந்தலைவர் அஷ்ரப் உருவாக்கிய நமது தேசிய விடுதலை இயக்கமான முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்த ஒன்றிணைய வேண்டும்.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக், முன்னாள் கிழக்கு மாகான ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *