லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ரிலீஸாகும் முன்பே சில சர்ச்சையில் படக்குழு சிக்கியுள்ளது. இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டு, பின்பு ரத்தானது. இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு காரணங்களோ இல்லை எனப் படக்குழு தெரிவித்தது. இருப்பினும் இது சர்ச்சையாகி, அரசியல் காரணங்களால் தான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சீமான் மற்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து வெளியான ட்ரைலரில் விஜய் பேசிய வசனம் ஒன்று பலரை முகம் சுளிக்க வைத்தது. மேலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நீக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சென்னையில் ரோகிணி திரையரங்கில் ட்ரைலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளை உடைத்திருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என மொத்தம் 6 நாட்களுக்கு அதாவது, 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. முதல் நாளான 19ஆம் தேதி மட்டும் கூடுதல் சிறப்பு காட்சியாக அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 7 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு, துணிவு படதிற்கு, முதல் நாள், நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. அப்போது லாரியின் மீது கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு வெளியான எந்த படத்திற்கும் அதிகாலை மற்றும் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் லியோ படத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.