வடக்கு கிழக்கிலிருந்து கொழும்பு வரை பயணம் செய்யும் தனியார் பேரூந்துகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுதல் மற்றும் அனுமதி பத்திரமின்றி பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என 26.05.2023 அன்று இடம்பெற்ற அமைச்சு மட்ட ஆலோசனைக்குழு கூட்டத்தில் யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரேரணை முன்வைத்திருந்தார்.
அதற்குரிய பதிலறிக்கை இன்று (24.08.2023) இடம்பெற்ற அமைச்சு மட்ட ஆலோசனைக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் சோதனை குழுக்கள் மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் சோதனை செய்துள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெற்றால் அவை தொடர்பான முறைப்பாடுகளை செய்யுமாறும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.