இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்தல் மற்றும் துரிதபடுத்தலுக்கான முன்மொழிவொன்றை விரைவாகத் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான குழுவின் (NTFC) செயற்திறன் மீளாய்வு கூட்டத்தின் போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்படி அறிவுரைகளை வழங்கினார்.
இலங்கைக்குள் வர்த்தகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான உகந்த சூழலை கட்டமைப்பதற்கான துரிதமானதும் மிக முக்கியமானதுமான தீர்மானங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
நாட்டிற்குள் வர்த்தகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பில் இக்கூட்டத்தின் போது ஆராயப்பட்டதோடு, தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான செயலகத்தின் பணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இந்த செயலகத்தினால் 2025-2030 காலப் பகுதியில் நிறைவுசெய்யப்பட வேண்டிய பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.
இதன் பூர்வாங்க நடவடிக்கையாக, தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான செயலகத்தை நிதி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுப்பதற்கும் அதன் பணியாளர் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.