முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தனது சட்டத்தரணிகள் ஊடாக சமர்ப்பித்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வாகன விபத்து தொடர்பில் தாம் வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் பாரபட்சமான நடத்தை காரணமாக வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், நீண்ட நேரம் உண்மைகளை பரிசீலித்து, தனது முடிவை அறிவித்த மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.
2011ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அருகில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா பயணித்த பதிவுசெய்யப்படாத வாகனம் விபத்துக்குள்ளானது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் மெய்ப்பாதுகாவலராக இருந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கின் சாட்சி அச்சுறுத்தப்பட்டமை மற்றும் விபத்து தொடர்பான விசாரணைக்காக ஆஜராகாததால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் அலவ்வை பிரதேசத்தை சேர்ந்தவர்.
எனினும் விபத்து சம்பந்தமாக நடத்திய விசாரணைகளுக்கு அமைய விபத்து நடந்த போது வாகனத்தை ஓட்டியது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா என்பது தெரியவந்துள்ளது.
அன்றைய பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீரங்கா, மதவாச்சியில் இருந்து மன்னார் பிரதான வீதி வழியாக மன்னார் நோக்கி சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா, 2011 ஆம் ஆண்டு வவுனியா முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உட்பட 6 பேருக்கு எதிராக விபத்தை மறைத்தமை மற்றும் குற்றவாளி தப்பிக்க உதவியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாளரை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீரங்காவை மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி ஒருவன்