அமெ.0ரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆரஞ்சு கவுன்டி பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து உள்ளன. இதனை தொலைக்காட்சி நிருபர் மற்றும் புகைப்பட கலைஞர் என இருவர் லைவ் நிகழ்ச்சியாக படம் பிடிக்க சென்று உள்ளனர். இந்த நிலையில், அவர்கள் நின்றிருந்த வாகனம் அருகே சென்ற மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி விட்டு அந்த பகுதியில் இருந்து தப்பினார். இந்த தாக்குதலில் காயமடைந்த 4 பேரில் தொலைக்காட்சி நிருபர் உயிரிழந்து விட்டார்.
ஸ்பெக்ட்ரம் நியூஸ் 13 என்ற தொலைக்காட்சி சேனலை சேர்ந்த நிருபரை சுட்டு கொன்ற வழக்கில், கெய்த் மெல்வின் மோசஸ் (வயது 19) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 சம்பவங்களிலும் அவருக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரீன் ஜீன்-பியர்ரே டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மற்றும் காயமடைந்த சக பணியாளரின் குடும்பத்தினர் மற்றும் ஒட்டுமொத்த ஸ்பெக்ட்ரம் நியூஸ் குழுவினருடன் எங்களது நினைவுகள் உள்ளன என தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபர் பைடன் தொடர் துப்பாக்கி சூடு எதிரொலியாக இதற்கு முன்பு கூறும்போது, துப்பாக்கி சூடு பற்றிய விவரங்களை பெற காத்திருக்கும் தருணத்தில், அமெரிக்கா முழுவதும் நடைபெறும் துப்பாக்கி வன்முறையை ஒழிப்பதற்கு கடுமையான நடவடிக்கை தேவை என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.
அதனால், அமெரிக்க சமூகத்தினர், பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் இல்லங்களை பாதுகாப்பான ஒன்றாக ஆக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளை சேர்ந்த உறுப்பினர்களும், உடனடியாக செயல்பட்டு, ஆயுத தடை சட்டத்திற்கான ஆவணங்களை என் முன் கொண்டு வாருங்கள் என வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன் என பேசியுள்ளார். அமெரிக்காவில் தினசரி நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள், மெகா தொடர் போன்ற சம்பவங்களாகி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளன.