மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடையானது, இந்தியாவுடனான வர்த்தகம் செய்வதற்கான ஒரு காரணியாக அமைந்து விட்டது என ரஷியா தெரிவித்து உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போரால் உலக நாடுகளின் எதிர்ப்பை ரஷியா எதிர்கொண்டது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடையை கண்டு கொள்ளாத ரஷியா ஓராண்டாக போரை நீட்டித்து வருகிறது.

இந்த போரால், ரஷியா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தகம் சூடு பிடித்தது. அதன்படி கடந்த 2022-ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பரஸ்பர வணிகம் 3 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராக இருந்தது.

இந்நிலையில், ரஷிய வெளியுறவு துணை மந்திரி ஆண்ட்ரி ருடென்கோ செய்தியாளர்களிடம் பேசும்போது, ரஷியாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடையானது, இந்தியாவுடன் நாங்கள் வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒரு காரணியாக அமைந்து விட்டது. தேசிய கரன்சிகளின் அடிப்படையில் தொகைகளை பரிமாறி கொள்வது என இந்தியா மற்றும் ரஷியா முடிவு செய்தது.

சுயசார்பு அடிப்படையில் போக்குவரத்து மற்றும் நிதி சார்ந்த கட்டமைப்புகளை வளர்த்து கொண்டோம் என கூறியுள்ளார். இந்த முன்னேற்ற நிலையானது இந்த ஆண்டும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எண்ணெய் வினியோக அதிகரிப்பு பற்றி ரஷியாவின் திட்டம் என்ன? என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், இந்தியாவுக்கு எவ்வளவு தேவையாக உள்ளதோ அவ்வளவு எண்ணெய்யை நாங்கள் தொடர்ந்து ஏற்றுமதி செய்வோம்.

அந்நாட்டின் ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சப்ளை இருக்கும். அதற்கான கோரிக்கைகளை விரைவாக தொடர்புடைய எங்களது நாட்டு நிறுவனங்கள் பூர்த்தி செய்யும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *