பாகிஸ்தானின் இம்ரான்கானின் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கவிழ்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.
தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வரும் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாகிஸ்தானில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி தனது ஆதரவாளர்களுடன் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
அதேவேளை, இம்ரான்கான் மீது ஊழல், பொலிசாருக்கு மிரட்டல் விடுத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பரிசுப்பொருட்கள் பெற்றது தொடர்பாக வருமான கணக்கை தாக்கல் செய்யாதது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கானை கைது செய்ய கோர்ட்டு வாரண்ட் பிறப்பித்தது.
இந்நிலையில் இம்ரான்கானை கைது செய்ய நேற்று லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு பொலிசார் சென்றது. அப்போது அங்கு குவிந்த இம்ரான்கான் ஆதரவாளர்கள் அவரை பொலிசார் கைது செய்ய விடாமல் தடுத்தனர்.
இதனால், பொலிசாருக்கு இம்ரான்கான் ஆதரவாளர்களான பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சப் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் இம்ரான்கனை கைது செய்யும் போலீசாரின் முயற்சி தோல்வியடைந்தது.
அதேவேளை, இம்ரான்கான் வீடு அருகே கூடுதல் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இம்ரான்கானை பொலிசார் கைது செய்ய முயற்சித்ததையடுத்து பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவத்தால் பாகிஸ்தானில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.