இலங்கைக்கு கடத்துவதற்காக நாட்டுப்படகில் பதுக்கிய 6 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை, மரைக்காயர்பட்டிணம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா எண்ணெய், கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன், வாசனை திரவியங்களின் கூடிய நக பாலிஷ், சமையல் மஞ்சள், செருப்பு, கடல் அட்டைகள் உள்ளிட்ட பல பொருட்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக அடுத்தடுத்து அதிகளவு பிடிபட்டு வருகின்றன.
இதை தொடர்ந்து மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியை மையப்படுத்தி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, ஒருகிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு, உளவுத்துறை, மரைன் போலீஸ் என பல்வேறு பிரிவு தீவிர கண்காணிப்பில் உள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசாருக்கு வேதாளை சிங்கி வலை குச்சு பகுதியில் இருந்து வலி நிவாரண மாத்திரைகள் இலங்கைக்கு நாட்டு படகு மூலம் இன்று அதிகாலை கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வேதாளை, மரைக்காயர் பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகளில் ஏறி தீவிர சோதனை நடத்தினர்.அப்போது வேதாளை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டுப்படகை சோதனை செய்த போது,அதில் தலா 10 வீதம் 60 ஆயிரம் அட்டைகளில் இருந்த 6 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் மறைத்து வைத்திருப்பதை கண்டு பிடித்தனர்.
மாத்திரைகளை நாட்டுப்படகு டன் கைப்பற்றி கியூ பிரிவு போலீசார், அதனை இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கியூ பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட வலி நிவாரண மாத்திரைகள் சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் இருக்கும் எனவும், இந்த மாத்திரைகளுடன் ஒரு விதமான பொருளை சேர்த்து இலங்கையில் இதை போதை பொருளாக பயன்படுத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
வேதாளை கடற்கரை இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தல் முக்கிய கேந்திரமாக மாறியுள்ளது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.