கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தற்பால் ஈர்ப்பு தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சட்டமூலம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் படி, தற்பால் ஈர்ப்பாளர்கள் என அடையாளம் காணப்படுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், கடும் விதி மீறல்களில் ஈடுபடும் தற்பால் ஈர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

ஏற்னவே உகாண்டா உட்பட 30-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் தற்பாலின உறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது உகாண்டாவில் புதிய நடவடிக்கையாக சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்பால் உறவை ஊக்குவிப்பது, அதில் ஈடுபடுவதற்கான திட்டம் தீட்டுவது ஆகியவற்றுக்கு இச்சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர் அசுமான் பசலிர்லா, இந்த சட்டமூலத்தை உகாண்டா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய போது, தேவாலய கலாசாரத்தை பாதுகாக்கவும் குடும்ப விழுமியங்கள், பன்முக கலாசாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றை பாதுகாக்கவும் இதனை கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.

இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் 389 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. அது ஜனாதிபதி Yoweri Museveni-க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் கையெழுத்திடும் பட்சத்தில், சட்டமூலம் நடைமுறைக்கு வரும்.

எவ்வாறாயினும், இதுவொரு வெறுக்கத்தக்க சட்டமூலம் என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் வௌியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *