தமது கோரிக்கையை ஏற்று, குடிநீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அன்னமலை – 01, அன்னமலை – 02,  நாவிதன்வெளி – 01, சவளக்கடை, சாளம்பைக்கேணி – 03 , சாளம்பைக்கேணி – 04, மத்திய முகாம் – 01 உட்பட 12 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பெறுவதில் நெருக்கடியை எதிர்கொண்டனர்.

வீதிகளுக்கு நீர்விநியோகக் குழாய்கள் பொருத்தப்படாமல் இருந்ததாலேயே மக்கள் இவ்வாறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

இந்நிலையில் மக்களின் சார்பில், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரான தி. யோகநாயகன்,  அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு கோரிக்கை கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார்.

இக்கடிதம் கிடைத்த கையோடு, மக்களின் பிரச்சினை உடன் தீர்க்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆலோசனை வழங்கினார்.

இதற்கமைய தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகளால்,  நீர்விநியோகக் குழாய்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே மக்களும், குறித்த பிரதேச சபை உறுப்பினரும் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், அவரின் சேவை நாட்டுக்கு தேவையென வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *