ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சாமிமலை கவரவில ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் உயிர் பயத்தில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளதாக குறித்த பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதாவது பழமையான வரலாற்றை கொண்ட கவரவில ஆரம்ப பிரிவு பாடசாலை ஆரம்பத்தில் தொழிற்சாலையிலேயே கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பின்னரான காலங்களில் பாடசாலைகளில் புது கட்டிடங்கள் அமைக்கப்பட்டாலும் இடப்பற்றாக்குறையும் வளப்பற்றாக்குறையும் காணப்படுவதால் தரம் மூன்று மற்றும் சங்கீதஇநடன வகுப்புக்கள் குறித்த பாழடைந்த தொழிற்சாலைகளிலேயே இடம்பெற்று வருவதாகவும் அந்த தொழிற்சாலையில் தற்போது பலகைகளும் கூரைத்தகடுகளும் கரையான் அரிப்பிற்கு உள்ளாகியுள்ளதோடு உறுதியற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேலும் மழை காலங்களில் நீர் கூரை வழியாக உட்புகுகின்ற அதேவேளை காற்று வீசும் சந்தர்ப்பங்களில் முழு தொழிற்சாலையும் அசையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அத்தொழிற்சாலையில் கல்வி கற்கும் மாணவர்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும் உயிர் பயத்துடனே கற்க வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் எந்நேரத்தில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் நடந்த பிறகு பேசி பயனில்லை எனவும்   பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கல்வி அமைச்சும் தலையிட்டு புதிய கட்டிடத்தையோ அல்லது பாதுகாப்பான சூழலையோ வழங்குமாறு பாடசாலை நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நீலமேகம் பிரசாந்த்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *