பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு பெருந்தோட்ட காணிகளை குத்தகைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும் வகையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் இந்த காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். மலையக பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக உறுதி மொழிகள் வழங்கப்படுவதும்,பின்னர் ஏமாற்றப்படுவதும் வழமை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

“மலையகத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை நடந்ததும் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது வழமை.

ஆனால் மலையக மக்களின் காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் எழும் போது அது தொடர்பான கலந்துரையாடல்கள் பெருந்தோட்ட அமைச்சோடு முன்னெடுக்கப்பட்டாலும் அது உறுதி மொழியோடு நின்று விடுகின்றதே தவிர செயற்பாட்டு வடிவம் பெறுவது இல்லை.

இதற்கு ஒரே தீர்வு பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு பெருந்தோட்ட காணிகளை குத்தகைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும் வகையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் இந்த காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

அதேவேளை, அங்கு வாழ்கின்றவர்களுக்கு அங்கேயே 10 பேர்ச் காணி வழங்கப்பட்டு அவர்களின் வீடுகளை நிர்மாணித்து வாழ்வதற்கான காணி மற்றும் வீட்டு உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். இதுவே அம்மக்களுக்கு நிரந்தர தீர்வாகும்.

இவ்வாறான சம்பவங்கள் இனி இடம்பெறாது என்ற உறுதிமொழிகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டாலும் இன்றுவரை அவை தொடர்ந்து வண்ணமே உள்ளன.

உதாரணமாக கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொடர்ச்சியாகவே தொழிலாளர்களின் உரிமை மீறப்பட்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனவே நிரந்தர தீர்வினை நோக்கிய நகர்வே இம்மக்களின் பிரச்சினைகளுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும்.

எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். அவரினூடாக இது சாத்தியப்படும் என்ற நம்பிக்கையும் உண்டு” என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *