பிரதமர் மோடியை பற்றிய ஆவண படம் ஒன்றை பி.பி.சி. நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரண்டு பகுதிகளாக வெளியிட்டது.

நாட்டின் 74-வது குடியரசு தினம் கடைப்பிடிக்க கூடிய சூழலில் இந்த ஆவணம் வெளியிட்டது பரபரப்பு ஏற்படுத்தியது. அதில், 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி விமர்சிக்கப்பட்டு இருந்தது

இதற்கு மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காலனி மனப்பான்மையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்றும் தெரிவித்து இருந்தது.

இதனை தொடர்ந்து, பி.பி.சி. ஆவண படத்திற்கு மத்திய அரசு சார்பில் தடை விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, பி.பி.சி. ஆவண பட தடை பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசினார்.

அவர் கூறும்போது, உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திரம் முக்கியம் என்பதற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறோம். கருத்து சுதந்திரம், மதம் அல்லது அதுசார்ந்த நம்பிக்கையில் சுதந்திரம் போன்ற ஜனநாயகத்தன்மை கொண்ட கொள்கையின் முக்கியத்துவம் பற்றி தொடர்ந்து நாங்கள் மேற்கோள்காட்டி வருகிறோம்.

நமது ஜனநாயக மாண்புகளை வலுப்படுத்தும் மனித உரிமைகளாக அவை பங்காற்றி வருகின்றன. உலக நாடுகளுடனான எங்களது நல்லுறவில் இந்த முக்கிய அம்சம் பற்றி நாங்கள் சுட்டி காட்டி வருகிறோம். இந்தியாவுடனான உறவிலும் கூட இதனை சுட்டி காட்டியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது, நீங்கள் குறிப்பிடும் அந்த ஆவண படம் பற்றி எனக்கு அவ்வளவாக விவரம் தெரியாது.

ஆனால், சமூக குழு கட்டமைப்பின் நம்பிக்கை மையங்களாக மற்றும் நீதி, சுதந்திரம், பொறுப்பு உள்ளிட்ட பகிரப்பட்ட சமூக மதிப்புகளால் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் செழித்தோங்கி, துடிப்புள்ள ஜனநாயக நாடுகளாக விளங்குகின்றன என்பது எனக்கு நன்றாக தெரியும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *