நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஊடகவியலாளருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவரது வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் கட்டுடை அரசடி வீதியிலுள்ள ஊடகவியலாளர் எஸ். ஆர். கரனின் வீடே இவ்வாறு நேற்று (27.01.2023) மாலை முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த ஊடகவியலாளரின் வீட்டுக்கு முன்புள்ள வயல் காணியில் எல்லைக்காக போடப்பட்டிருந்த சீமெந்து தூண் நேற்று மாலை உடைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவில் பணியாற்றும் நபராலே குறித்த தூண் உடைக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.
குறித்த நபருக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணி நிமிர்த்தம் வெளியில் சென்று வீட்டுக்குத் திரும்பிய ஊடகவியலாளரைப் பின் தொடர்ந்து வந்த அந்த நபரும் அவரது உறவினர் ஒருவரும் தூணை உடைத்து வீழ்த்தியதுடன் பெண்கள் உட்பட ஆறுக்கும் மேற்பட்ட நபர்கள் ஊடகவியலாளரின் வீட்டினை முற்றுகையிட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஊடகவியலாளர் கரன், தொலைபேசி வாயிலாக ஊடக நண்பர்களுக்கும், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியதை அறிந்து கொண்ட நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அரசியல் செல்வாக்குடைய நபர்
இதேவேளை, வயலில் போடப்பட்டிருந்த தூண் உடைக்கப்பட்ட காட்சி சிசிரிவியில் பதிவாகியுள்ளது.
கோவிலுக்கு செல்லும் மக்கள் பயன்படுத்தும் பாதையை அரசியல் செல்வாக்குடைய குறித்த நபர் அபகரித்து வருவது தொடர்பில் இணக்க சபையிலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
மக்கள் பயன்படுத்தும் பாதையில் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் யாழ். மாநகர சபை தீயணைப்புப் பிரிவு ஊழியர் தொடர்பிலும், அவரது அநாகரிகமான செயற்பாடுகள் தொடர்பிலும் ஆணையாளரிடம் வாய்மொழி மூலமாக ஊடகவியலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூண் உடைக்கப்பட்டது தொடர்பான காணொளியுடன் ஆணையாளரிடம் எழுத்து மூலமான முறைப்பாடு செய்யவுள்ளதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்