எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் இன்று (13) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தேவைக்காக எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு தமது நிறுவனம் தயாராக இருப்பதாக சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்காக, தற்போதுள்ள முறைமைக்கு அமைவாக தமது நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்த குறித்த நிறுவன்த்தின் பிரதிநிதிகள், அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டையில் பிரதான வலுசக்தி மையத்தை, சுத்திகரிப்பு நிலையத்துடன், நிர்மாணிக்கத் தேவையான முழு முதலீட்டையும் தமது நிறுவனம் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் நாட்டின் அபிலாஷைகளின் அடிப்படையில் உரிய அழைப்புகளுக்குப் பங்கேற்க தமது நிறுவனம் தயாராக இருப்பதாகவும் பிரதிநிதிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விநியோகம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள், அது குறித்து தமது ஆலோசனைகளையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் பின்னர், இலங்கை துரித அபிவிருத்தியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று, நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வர்த்தகங்களை எதிர்காலத்தில் ஊக்குவிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன ஆகியோருடன் அரச அதிகாரிகள் மற்றும் சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *