தொடர்ச்சியாக ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா நிலையில் இருந்து வரும்  முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களின் (முன்பள்ளி) உத்தியோகபூர்வ பதிவுகள் இயல்பாகவே செயலிழக்கும்  நிலையை அடைவதாக தெரிவித்துள்ள கல்வி ராஜாங்க அமைச்சர்  அருணாச்சலம் அரவிந்தகுமார், அவ்வாறான முன் பள்ளிகள் அல்லது புதிதாக நிறுவப்பட உள்ள  முன்பள்ளிகளை   பதிவு செய்து கொள்ளும் பொருட்டு  எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்பதாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டை பிடித்திருந்த கொவிட் 19 மற்றும் அதன் பின்னரான பொருளாதார நெருக்கடி ஆகிய காரணிகளால் மலையகத்தில் இயங்கி வந்த பல முன் பள்ளி பருவ அபிவிருத்தி நிலையங்கள் (முன்பள்ளிகள்) இயங்கா நிலை அல்லது இழுத்து மூட வேண்டிய நிலைமைகளுக்கு தள்ளப்பட்டன.

இவ்வாறு மூடப்பட்ட முன்பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு பலரும் பிரயத்தனங்களை மேற்கொள்கின்ற போதிலும் சட்டரீதியான அணுகுமுறைகள் அதற்கு தடையாக இருப்பது தவிர்க்க முடியாதுள்ளது.

உதாரணமாக கூறினால் மஸ்கெலியா இரண்டாம் வீதியில் இயங்கி வந்த முன்பள்ளி ஒன்று மேற்கூறப்பட்ட  காரணிகளால் மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. தற்போது அதனை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் அது சட்ட வரைக்குள்ளேயே மேற்கொள்ளப்பட வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

ஒரு வருடத்துக்கு மேலாக ஏதேனும் ஒரு முன் பள்ளி ஏதேனும் ஒரு காரணம் கருதி மூடப்பட்டிருக்கும் ஆகின் அதன் பதிவானது இயல்பாகவே செயலிழந்து விடுகிறது என்று தேசிய முன்  பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையம் சுட்டிக்காட்டுகிறது.

ஆகவே ஏதேனும்  காரணங்களால் முன் பள்ளிகள்  ஒரு வருடமோ அல்லது அதற்கு மேலாகவோ மூடப்பட்டிருந்தால் அதன் பதிவு செயல் இழந்ததாக கருதப்பட வேண்டும் என்பதுடன் மீண்டும் அவ்வாறான முன் பள்ளிகளை ஆரம்பிப்பதற்கும்  இல்லாவிட்டால் 2024இல் புதிய முன்பள்ளிகள் ஆரம்பிப்பதற்கும்  முயற்சிகளை மேற்கொண்டிருப்போர் மாகாண முன் பள்ளி பருவ அபிவிருத்திப் பிரிவில் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை மாகாண பிரிவில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்பதாக மாகாண முன் பள்ளி பருவ அபிவிருத்தி பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்  என்று கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *