பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்களும் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும்” என தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆர்ப்பாட்டம் காரணமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்பாக பெருமளவான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதேவேளை, சிலரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினமும் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

வடக்கில் சிங்கள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக கொழும்பில் வசிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முன்பாக போராட்டங்களை மேற்கொள்ள இருக்கிறோம் என அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த பின்புலத்திலே முதற்கட்டமாக கொழும்பில் உள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்பாக போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம் எனவும் இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *