எஸ்.எம்.எம்.முர்ஷித்

கல்குடா கடலில் சட்டவிரோதமான மீன்பிடி முறையான சுருக்கு வலை மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மீனவக்குழுவினர் இன்று (25) வெள்ளிக்கிழமை பேத்தாழை மீனவர்களால் சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்டு மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் சட்டநடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்நடவடிக்கையின் போது பத்து (10) மீன்பிடிப் படகுகளில் முப்பத்தாறு (36) மீனவர்களும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள், கல்குடா பொலிஸார் ஆகியோரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பேத்தாழை மீனவ சங்கச்செயலாளர் பிரான்சிஸ் ரமேஸ் பாலு தெரிவித்தார்.

மாங்கேணி, காயான்கேணி, வட்டவான், இறாலோடை, நாசிவன்தீவு ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

நீண்டகாலமாக இடம்பெற்று வந்த இந்நடவடிக்கை குறித்து உரிய மீனவர்களுக்கு தங்களால் பலமுறை அறிவித்தல் விடுத்தும், உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தும் இச்சட்டவிரோத நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

இதையடுத்து, இன்று அதிகாலை இவர்கள் மீதான சுற்றி வளைப்பை தாங்கள் மேற்கொள்ள நேரிட்டதாக பேத்தாழை மீனவர்கள் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், இது போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றிருக்காது என மீனவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

கைப்பற்றப்பட்ட படகுகள், மீன்கள் மற்றும் மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றுக்கு ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

நீண்டகாலமாக வெளிமாவட்டத்தைச்சேர்ந்த மீனவர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் சட்டவிரோத வலைகளைப் பாவித்து வருவதனால் தங்களது வழமையான மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாழ்வாதரமும் பாதிக்கப்படுள்ளதாக கவலை தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கையெடுக்காத பட்சத்தில் தாங்களாக முன் வந்து இத்தீர்மானத்தை மேற்கொண்டு சுருக்குவலை மீந்தொழிலைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தங்களைப்போன்று மாவட்டத்திலுள்ள மீன்பிடிச்சங்கங்கள் முன் வந்து இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்ள முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

குறித்த மீன்பிடிச்சங்கத்தின் செயற்பாட்டை பிரதேசத்தில் பலரும் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *