நூருல் ஹுதா உமர்கல்முனை வலயக் கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளராகவும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாகவும் கடமையாற்றி வந்த இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி திருமதி ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் ஒன்றான கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) புதிய அதிபராக கல்வியமைச்சினால் நியமிக்கப்பட்டு இன்று (25) தனது கடமைகளை கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)யில் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை கற்ற பழைய மாணவியான இவர் அப் பாடசாலையின் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபர் சேவைக்கும் தெரிவுசெய்யப்பட்ட ஒருவராவார் என்பதுடன் அப் பாடசாலையின் வரலாற்றில் முதலாவது இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி என்கிற பெருமைக்கும் சொந்தக்காரியாக திகழ்கிறார்.

கல்முனை வலயக் கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளராகவும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாகவும் கடமையாற்றிய இவர் சிறந்த நிர்வாகத் திறமை கொண்ட அதிகாரியாக பலரது பாராட்டுக்களையும் பெற்றதுடன் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டதன் பின்னர் அதிபராக கடமையெற்கும் முதலாவது பெண் அதிபர் ஆவார்.

இவரது கடமையேற்பு நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலக உயர் அதிகாரிகள், கல்விமான்கள், ஊர் பிரமுகர்கள், சக பாடசாலை அதிபர்கள், இப்பாடசாலையின் நிர்வாகத்தினர்,  பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், பாடசாலை பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், புதிய அதிபரின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர். இவரது நியமனத்தை தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *