இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் வழிபாட்டுத்தலமொன்றில் உள்ள கிணற்றில் வீழ்ந்து 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்து பண்டிகையான ராம நவமியை முன்னிட்டு பெலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரார்த்தனை நிகழ்வின் போது இந்த சம்பவம் வியாழக்கிழமை (30)  பதிவாகியுள்ளது.

இந்தூர் நகரில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் தொடர்ந்தும் காணாமற்போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த கிணற்றுக்கு மேல் வழிபாடுகளில் ஈடுபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, கிணற்றுக்கு மேலேயுள்ள காங்ரீட் (concrete) தளமொன்றில் பக்தர்கள் ஏறி நின்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனால், பாரம் தாங்காமல் காங்ரீட் தளம் உடைந்ததிலேயே இந்த அசம்பாவிதம் பதிவாகியுள்ளது.

40 அடி ஆழமான அந்தக் கிணறு, 4 தசாப்தங்களுக்கு முன்னர் மூடப்பட்டதன் பின்னரே இந்த வழிபாட்டுத்தலம் நிர்மாணிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் (Shivraj Singh Chouhan)இறந்தவர்களின் குடும்பத்திற்கு 500,000 இந்திய ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக அறிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு 200,000 ரூபா இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *