சட்டத்தரணி ப.நாகேந்திரன்
பாராளுமன்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்து இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிவானை அச்சுறுத்தி அவமதித்த சரத் வீரசேகரவின் அசிங்கமான நடத்தையை கண்டிக்கின்ற வகையில் சட்டத்தரணிகள் போராட்டத்தில் இன்று ஈடுப்பட்டனர்.
சரத் வீரசேகரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் இன்று 25/03/2023 காலை வட மாகாணத்தில் உள்ள பல்வேறு நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அடையாள எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
வவுனியா சட்டத்தரணிகள் சங்கம்
பாராளுமன்றஉறுப்பினர் சரத்வீரசேகர பாராளுமன்றுக்குள் இருந்து கொண்டு கதைக்காமல் தைரியமிருந்தால் வெளியில் வந்து கதைக்குமாறு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர கடந்த 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில்
தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஒருமணி நேர பணிப்புறக்கணிப்பும் ஆர்ப்பாட்டமும் இன்று (25.08) காலை 9.30 தொடக்கம் 10.30 வரை வவுனியா நீதிமன்றம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது
இதன்போது கருத்து தெரிவித்த போதே வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அன்ரன் புனிதநாயகம் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நிலுவையில் உள்ள குருந்தூர் மலை தொடர்பான வழக்கினை விசாரித்து வரும் நீதிபதியை பாதிக்கும் வகையிலான கருத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்திருந்தார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அத்துடன் அவர் பாராளுமன்ற வரப்பிரசாதத்தை பயன்படுத்தியே இவ்வாறு கதைக்கிறார். முடிந்தால் அவர் வெளியில் வந்து இவ்வாறு கதைக்கவேண்டும்.
அவரது உரை தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தலைவருக்கு முகவுரையிடப்பட்டு, ஜனாதிபதி மற்றும் நீதிஅமைச்சர், நீதிச்சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றிற்கு அதன் பிரதிகளை அனுப்பி இருக்கின்றோம். இந்த கடிதமானது வடக்கு கிழக்கில் அமைந்துள்ள அனைத்து சட்டத்தரணிகள் சங்கம் சார்பிலும் அனுப்பப்படவுள்ளது என்றார்.