உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்கள் இரண்டும் எமக்கு சமமாக அவசியம். சர்வதேச நிதி உதவிகள்  மூலமான “வறுமை நிவாரணங்கள்” பெருந்தோட்ட பிரிவினருக்கு வழங்கப்படுவது அவசியம். இலங்கை அரசுக்கும்,  சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் உடன்படிக்கை ஏற்பட்டமை தொடர்பில் நான் மகிழ்கிறேன். அதற்கு மிகுந்த ஒத்துழைப்புகளை வழங்கிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள், என எதிரணி எம்பீக்கள், பன்னாட்டு தூதுவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஏற்பாட்டில் எதிரணி எம்பிக்கள், இலங்கையிலிருந்து செயற்படும் அமெரிக்க, இந்திய, பிரிட்டன், ஜப்பான், கனடா, பிரான்சிய, நியூசிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி நாட்டு தூதரக பிரதிநிதிகளை சந்தித்து உரையாடிய போது  மனோ எம்பி இந்த கருத்துகளை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மனோ எம்பி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

 இலங்கை அரசுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் உடன்படிக்கை ஏற்பட்டமை தொடர்பில் நான் மகிழ்கிறேன். அதற்கு மிகுந்த ஒத்துழைப்புகளை வழங்கிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.   

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் பிற்போடப்பட்டமை தொடர்பில் இங்கே உரையாடப்பட்ட போது, அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பிற்போடப்பட்டுள்ள மாகாணசபை தேர்தல்கள் பற்றி கேள்வி எழுப்பியமையை நான் வரவேற்கிறேன். அதேபோல் இந்திய பிரதி தூதுவரும் தமது நாட்டின் நிரந்தர நிலைப்பாடாக  மாகாணசபை தேர்தல்கள் இருக்கின்றது எனக்கூறினார். அதையிட்டும் மகிழ்கிறேன். உள்ளூராட்சி சபை தேர்தல்கள்,  மாகாணசபை தேர்தல்கள் இரண்டும்  நடத்தப்பட இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். உள்ளூராட்சி தேர்தல்கள் எவ்வளவு முக்கியமோ, அதேயளவு ஒன்பது  மாகாணசபைகளுக்கான தேர்தலும் முக்கியம், என்பது எங்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு.

அதேபோல் இலங்கை அரசுக்கு வழங்கப்படும்  சர்வதேச நிதி உதவிகள்  மூலமான “வறுமை நிவாரணங்கள்” பெருந்தோட்ட பிரிவினருக்கு கட்டாயமாக  வழங்கப்படுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், இப்போது நலிவடைந்த பிரிவினரை அடையலாம் காணும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுகின்றது. அதில் நிறைய அரசியல் கலந்துள்ளது. ஆகவே, அதன் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. இந்நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரிவினராக, பெருந்தோட்ட உழைக்கும் மக்கள் உள்ளனர் என்பதை இன்று பல கணிப்பீடுகள் கூறுகின்றன. ஆகவே உங்களது உதவிகளினால் வழங்கப்படும் வறுமை நிவாரண கொடுப்பனவுகள்,  பெருந்தோட்ட துறைக்கு வழங்கப்படுவதை உறுதிபடுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *